பக்கம்:கனிச்சாறு 4.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 41


25

பூத்த தாமரைப் புதுமுகம்!


பூத்த தாமரைப் புதுமுகம்,உன்னைப்
பார்த்திடப் பார்த்திடக் குளிருதென் அகம்,நீ (பூத்த)

கோத்திட்ட முல்லைச் சரத்தினைப் போல
குமிழ்நகை சிந்திடும் பற்களி னாலே
வார்த்த எழில்மிகு ஒளிநிறை வெள்ளம்
வந்திங்குப் பாய்ந்ததால் செழித்ததென் இல்லம்! (பூத்த)

ஆடி அசைந்திடும் செம்பொன்னின் தேர், நீ!
அன்னைக்கும் தந்தைக்கும் பெரும்புகழ் சேர், நீ!
ஓடிக் குதித்திடும் இளமானின் கன்றே,
ஓதுதல் மறவாதே! என்செல்வக் குன்றே! (பூத்த)

குத்திட்டு வீழ்ந்திடும் நுரைபொங்கும் நீரில்
குதித்துப் புரண்டிடும் விழிக்கெண்டைச் சீரில்,
ஒத்திட்டுப் பாய்ந்த தடி, என்றன் ஆவி;
ஓடிடும் பின்வந்த தே, மனம் தாவி! (பூத்த)

அப்பாவுக் கோ, செல்லப் பிள்ளை, நீ கிளியே!
அம்மாவுக் கென்றும், நீ ஒளிநல்கும் விழியே!
தப்பாமல் பள்ளிக்கு நாள்தோறும் செல்வாய்;
தவறாமல் ஒவ்வொரு தேர்விலும் வெல்வாய்! (பூத்த)

பாவாடை விரித்தாடும் பசும்பச்சை மயில்,நீ!
பண்ணோடு தமிழ் பாடி மயலேற்றுங் குயில்,நீ!
பூவோடு நெய்நாறுங் கருங்குழல் பின்னிப்
பொலிகின்றாய்! மகிழ்கின்றேன் வருநாளை எண்ணி (பூத்த)

தண்டை குலுங்கிட நீபோகும் போதில்,
தாலாட்டுப் பாடிய நாள்விழும் காதில்!
கொண்டை குலுங்கிட நீவளர்ந் தந்தாள்
கொம்பொன்றைப் பற்றுவாய் எனக்கது பொன்னாள்! (பூத்த)

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/76&oldid=1440515" இலிருந்து மீள்விக்கப்பட்டது