பக்கம்:கனிச்சாறு 4.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 கனிச்சாறு – நான்காம் தொகுதி


26

தொண்டன், நீ!


அரசியல் தெரிந்துகொள்;
அறமும் தெரிந்துகொள்;
வரிசையாய் நேர்மையும்
வாய்மையும் கடைப்பிடி;
முரசின் முழக்குப்போல்
முறுக்கேற்று குரலில்;
உரைக்கத் திறன் பெறு;
ஊர்க்கு உழை; தொண்டன், நீ!

கொடிபிடித் திடுவதும்
கூச்சல் இடுவதும்
அடிபிடி வேலை;
அரசியல் அன்று!
மடிபிடித் தென்றும்
மாங்காய் பறியாதே!
குடிகள் நலம் பெறக்
கொடு,உனை; தொண்டன், நீ!

கரையற்ற வேட்கை,
கடமையின் எழுச்சி
தரையெலாம் பாயும்
தணல்கின்ற எண்ணம்,
புரையிலா அன்பு,
பூக்கட்டும் நெஞ்சில்!
விரையும் பொருட்குனை
விற்காதே; தொண்டன், நீ!

வழக்கிடும் பதவிக்கு
வால்பிடிக் காதே!
பழக்கமும் நெகிழ்ச்சியும்
பாழ்செய்யும் உன்னை!
ஒழுக்கமே உடலுரம்!
உழைப்பதே இன்பம்!
மழுகில்லா முயற்சி கொள்;
மருளாதே; தொண்டன், நீ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/77&oldid=1440516" இலிருந்து மீள்விக்கப்பட்டது