பக்கம்:கனிச்சாறு 4.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 45


28

பழைய மனமே புதிய உலகம் !


எத்தனைப் பெரிய உலகம்! இதில்தான்
எத்தனை மக்கள்; எத்தனை இனங்கள்!
எத்தனை நாடுகள்! எத்தனை அரசுகள்!
எத்தனை மொழிகள்! எத்தனைத் தோற்றம்!
அத்தனை மக்களின் அமைப்பிலும் உள்ள
வாழ்க்கை நிலைகள் எத்தனை, தெரியுமா?
தாழ்ச்சி என்பதோ ஒருவனுக்கு உயர்ச்சி!
இன்னா தென்பது ஒருவனுக் கினியது!
நல்ல தென்பது தீதுஒரு வனுக்கே!
ஒருபுடை இருளும் ஒருபுடை ஒளியும் 10
மாறி மாறி இயங்குமண் ணுலகம்!

ஒருநாட்டில் ஒன்று பழைய தென்றால்
பிறநாட்டில் அதுவே புதியதென் கின்றான்!
நம்நாட்டில் ஒருவர் அறிஞர் என்றால்
பிறநாட்டில் அவரே மாணவர் ஆகிறார்;
நம்நா கரிகம் பிறநாட்டில் பழையது!
நமக்குப் பழமை பிறர்க்குப் புதுமையே!

பழக்கமும் உடையுமே பண்பா டாகுமா?
வழக்கம் ஒன்றே ஒழுக்கமாய் விடுமா?
நன்றாய் உடுத்துதல், நன்றாய் உண்ணுதல் 20
என்பதே ‘வாழ்க்கை’ என்றாகி விடுமா?

அழகிய தலைமயிர், அழகிய உறுப்புகள்,
பழுதிலா உருவம்,இத்தனை இருந்தும்
உழுதிடா உள்ளம் உவர்நிலம் அன்றோ?
‘நாகரிகம்’ என்பது நல்ல உடைகளா?
‘நாகரிகம்’ என்பது நன்றாய் உண்பதா?
உள்ளம் என்பதே உரைகல் தம்பி!
உள்ளமே வாழ்க்கை! உள்ளமே ஒழுக்கம்!
ஒருவன் பசித்திட ஒருவன் உண்பதா?
ஒருவன் மாடியில், ஒருவன் தெருவிலா? 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/80&oldid=1440519" இலிருந்து மீள்விக்கப்பட்டது