பக்கம்:கனிச்சாறு 4.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 49


31

பள்ளியை மூடுங்கள் !


படிப்பை நிறுத்துங்கள்!
பள்ளியை மூடுங்கள்!
பண்பாட்டிற் குயிர் ஊட்டுங்கள்! - வெறும்
நடிப்பெதற்கு? - போலி
நடையெதற்கு? - ஆடும்
நாடகத் திரை மாற்றுங்கள்!

அறிவை அடக்குங்கள்;
ஆய்வை ஒடுக்குங்கள்;
அகத்தினில் ஒளியேற்றுங்கள்! - பணச்
செறிவெதற்கு? - பொய்ம்மைச்
சிறப்பெதற்கு? - கொண்ட
செயலுக்குத் தெளிவூட்டுங்கள்!

நிலவைப் பிடித்தென்ன?
நிலத்தில் இருந்தென்ன?
நிறைவான வாழ்வில்லையே! அற
நெறிகளெங்கே? - மன
நேர்மை யெங்கே? - தீய
நிகழ்ச்சிக்கு வீழ்வில்லையே!

எழில்கூட்டும் நகரங்கள்!
எண்ணற்ற ஊர்திகள்!
ஏழ்மைக்கு விடிவில்லையே! - கல்வி
ஏற்றமெங்கே? - மெய்ம்மை
இன்பமெங்கே? - புன்மை
இழிவுக்கு முடிவில்லையே!

செயலுக்குக் குறைவில்லை;
சீருக்குத் தாழ்வில்லை;
செலவுக்கு வரவில்லையே! - நல்ல
வயல்களுண்டு; - நீர்க்கால்
வாய்களுண்டு! - வீணர்
வாய்க்கொரு பூட்டில்லையே!

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/84&oldid=1440704" இலிருந்து மீள்விக்கப்பட்டது