பக்கம்:கனிச்சாறு 4.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 கனிச்சாறு – நான்காம் தொகுதி


மாந்தனை மாந்தனாய் மலர்த்துதல் கல்வி!
நீந்துயிர், நெளியுயிர், நெடுவான் மிதக்குயிர்,
முகன்வால் நீண்டு முதுகுகிடை யாக
உகலும் விலங்குயிர் யாவினும் ஓங்கிப் 30
படிப்படி யாகப் பண்பினும் அன்பினும்
வடிப்புற வளர்ந்து வான்வரை நிமிரும்
துடிப்பே கல்வியின் தொடக்கமென் றறிக!
முடிப்பில் லாதது கல்வியின் முதிர்ச்சி!

செப்பமாய்க் கல்விக்கு ஒப்புமை யாக
எப்புறக் கோட்டமும் ஏற்புற அமைந்தவோர்
மும்முனைக் கோணத்தை முடிபெனக் கூறலாம்!
அன்பும் பண்பும் அறிவும் மும்முனை!
எப்புற வளர்ச்சியும் இருமுனை வளர்ச்சிக்கு
ஒப்புர வொழுகலே உயர்வெனக் கொள்க! 40
அறிவு வளர்ந்துமற் றன்பும் பண்பும்
குறுகிப் போவதால் கொடுமையே மிகுந்திடும்!
பண்பிலாக் கல்வி பதர்மிகு விளைவு!
மன்பதை யழித்திடும் மண்மாரி யென்க!

அன்பும் பண்பும் அறிவின் எழுச்சிக்கு
முன்னும் பின்னும் முட்டுக் கால்கள்!

பண்பிலா அறிவுக்குப் பாக்கித் தானின்
அண்மைக் கால அழிசெயல் பொருத்துக!

அமெரிக்காவின் பண்பாட் டிழிவை
நம்மா ணவர்க்கு நன்கு விளக்குக! 50

எத்துறை யறிவும் பண்பா டிலாமையால்
இத்தரை யழிவுக் கேற்றிய தீயாய்ப்
பயன்பட் டிருப்பதும் பயன்படப் போவதும்
நலம்பெற மாணவர்க் குரைத்து நாட்டுக!

பண்பிலா அறிவு பயனிலை என்றே
துணுக்குறும் நெஞ்சொடு தொடுத்துக் கூறுக.
தொடுத்துக் கூறுவ தோடமை யாமல்,ஓர்
எடுத்துக் காட்டாய் நீவிரும் இலங்குக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/87&oldid=1440711" இலிருந்து மீள்விக்கப்பட்டது