பக்கம்:கனிச்சாறு 4.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 கனிச்சாறு – நான்காம் தொகுதி


34

நெஞ்சை அகலப்படுத்து; அறிவை ஆழப்படுத்து
தோளை உயரப்படுத்து!


நீலப் பெரு வானம்!, அதில்
நீந்தி உலாவரும் கதிரவன் பார்! - முகிற்
கோலச் சிதறல்களாம்,பல
கோடி விண் மீன்களின் கூட்டங்களாம்! - தம்பி
காலப் பெருவெளி பார்!, வீசுங்
காற்றினைப் பார்! ஒளி ஊற்றினைப் பார்! - மிகு
சாலப் பரப்புக் கண்டாய்! - உயிர்ச்
சாற்றிலும் அத்தகு ஆற்றல் உண்டாம்! - பார்
நீலப் பெருவானம்!

நெஞ்சு சிலிர்த்தது பார்!,கதிர்
நெற்றினைப் போல் உயிர் முற்றிடல் பார்!தூய
பஞ்சு பறந்தது போல்,உளம்
பறந்ததடா! உயிர் நிறைந்ததடா!,தம்பி
கொஞ்சமோ மிஞ்சும் இன்பம்!,உயிர்க்
கொப்பரை நிரம்பி வழியுதடா! - காற்றை
விஞ்சிடும் ஆற்றல் கண்டாய்!வான
வெளியினைப் போல் நெஞ்சம் விரிந்ததடா!அட
நெஞ்சு சிலிர்த்தது பார்!

நீலக் கடல்வெளி பார்!,அதில்
நீண்டு சுருண்டு விழும் அலைபார்!,அதன்
ஓலம் சலிப்பதுண்டோ?,உயிர்
ஊற்றுச் சுரந்தது போல் மகிழ்வாய்!,தம்பி
காலப் புழுதியெல்லாம்,உன்றன்
கால்களில் பட்டுப் பறக்குதடா,சிறு
தோலைப் பொதிந்த உடல்,சுடர்
தோற்றும் உயிர்க்கொரு மாற்றஞ்செய்மோ,அட
நீலக் கடல்வெளி பார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/89&oldid=1440716" இலிருந்து மீள்விக்கப்பட்டது