பக்கம்:கனிச்சாறு 4.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 55


நெஞ்சை அகல உழு! - அதன்
நினைவினை வாரியெங் கெங்கும் இறை,சிறு
குஞ்செனினும் உயிர்த்தூள்! - ஒளி
கூட்டிடும் பேரிறை நாட்டிய ஊர்,அது
துஞ்சுவ தோ இருளில்?,ஒரு
தூசுமென்றோ வானில் உலாவிவரும்,தம்பி
எஞ்சிடும் வாழ்க்கையிலே,உயிர்
ஏற்றமும் காண்! புது மாற்றமும் செய்!,அட
நெஞ்சை அகல உழு!

அறிவை ஆழப்படுத்து!,அஃது
ஆக்கிய சோறென நாக்கில் படை! - உயிர்ச்
செறிவில் வேறென்ன பயன்? - நாற்றச்
சேற்றிலும் தாமரை விளைவதுண்டே! பல
நெறிகளை முன் படைத்தாய்,அவை
நீள அகலத்தைப் பின் உடைத்தாய்! - தீய
வெறிகளில் மூழ்கினை காண்! - அந்த
வெற்று வெளிகளில் உற்றுனைப் பார்! - உன்றன்
அறிவை ஆழப் படுத்து!

தோளைக்குன் றாய் உயர்த்து!,பெருந்
தோல்விகண் டாலும், நீ கால் வளையேல்,ஒரு
வாளைச் சுழற்றும் விசை - தனில்
வையகம் தன்னையுன் கையகம்காண்!வெறும்
ஊளைத் தசையுடலம்,நல்
உப்பிட்டு வைக்கினும் தப்பிடுங் காண்!,எனில்
வேளைக்குக் காப்பதுவோ?,வெட்ட
வெளியினில் காலைவை! வானில் பற!, அட
தோளைக் குன்றாய் உயர்த்து!

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/90&oldid=1440718" இலிருந்து மீள்விக்கப்பட்டது