பக்கம்:கனிச்சாறு 4.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 57


36

அருமைச் சிறுவர்காள் !


அருமைச் சிறுவர்காள்!
அன்றாடம் உங்கள்
பெருமை பிறங்குமா
றொன்றுசெய்க! - பின்றைப்
பெருமைக்கும் ஏனைச்
சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்!

ஒன்றறிவீர்; தீயநினை
வோங்கின் ஒழுங்குகெடும்!
அன்றன்று தீமை
அகற்றுங்கள்! - பின்றைவரும்
நன்றிக்கு வித்தாகும்
நல்லொழுக்கம்; தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்!

மழுக்கலுறும்; சிற்சிலகால்
மாயங்கட் கேங்கும்;
அழுக் கடையும்; காண் பொருள்மேல்
ஆசை கொள்ளும்; - உள்ளம்,
இழுக்கல் உடையுழி
ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்!

பழச்சொல்லும் பற்சிரிப்பும்
கொண்டு பழகி
அழச்சொல்லி விட்டகல்வார்
தாமகல்க! - என்றும்
அழச்சொல்லி அல்லது
இடித்து வழக்கறிய
வல்லார் நட் பாய்ந்து கொளல்!

‘மன்பதையுள் என்றும்
மனக்கோட்டம் துன்பம்’ - எனத்
தென்போ டெதையும்
தெளிந்து செய்க! - அன்பிடையும்
இன்பம் விழையான்;
இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/92&oldid=1440721" இலிருந்து மீள்விக்கப்பட்டது