பக்கம்:கனிச்சாறு 4.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 கனிச்சாறு – நான்காம் தொகுதி


37

யாருக்காக, நீ ?


ஊருக்காகவோ,
உலகுக் காகவோ,
உலகில் வாழ்வதாய் எண்ணாதே! - பெருமை
பண்ணாதே! - அட,
யாருக்காகவும் வாழ்ந்திட வில்லை! - உன்
சீருக்காகவே பிறந்தாய்! - உயிர்ச்
சிறப்புக்காகவே வாழ்ந்தாய்!

நீருக்காகவோ,
நிலத்துக் காகவோ,
நெடுமரம் தோன்றியதென் றெண்ணாதே! - பிழை
பண்ணாதே! - அட,
வேருக்கு மில்லை; வித்துக்குமில்லை; - தன்
விளைவுசிறக்கவே தோன்றும்-பல்
வித்துகளை மண்ணில் ஊன்றும்!

உனக்காகத் தான்
நீ வந்து பிறந்தாய்!
உயிரொளி பெறுவதே அதன் நோக்கம்! - உள
உயர் வாக்கம்!- அட,
மனக்கோட்டை யெல்லாம் மண்ணோடு சிதறும்!- உயிர்
மாயாக் கோட்டை நல் எண்ணம்!-அதில்
மாசிலாதிருப்பது திண்ணம்!

தனக்கென நினைப்பதில்
பிறர்நலன் கெடாமல்
தவறின்றி வாழ்வதே உயர் வாழ்க்கை - பிறி(து)
உயிர் வீழ்க்கை- அட,
மனக்கசண் டெல்லாம் பொதுமையால் போகும்- உடல்
மாயினும் உயிர்நலம் பெருகும்?- உனை
மதித்து, நினைத்து நிலம் உருகும்!

-1972
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/93&oldid=1440722" இலிருந்து மீள்விக்கப்பட்டது