பக்கம்:கனிச்சாறு 4.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 59


38

குழந்தை...!


கன்னங் கரிய முடி!
பசும்பொன் நெற்றி!
கருக்கொள் இளம் புருவம்!
கிளிஞ்சிற் காது!
சின்னஞ் சிறிய விழி!
சிமிழின் மூக்கு!
சிரிப்பைக் கிழிக்கும் இதழ்!
சிறு பொக்கை வாய்!

பொன்னின் பொலிந்த முகம்!
பளிங்குக் கன்னம்!
புறாவின் மணிக்கழுத்து!
குருத்துத் தோள்கள்!
மின்னல் தெறித்த ஒளி!
கரைத்த சாந்தில்
வெண்ணெய் பிசைந்த உடல்!
குளிர்ந்த மேனி!

செக்கச் சிவந்த நிறம்!
செம்பொன் கைகள்!
செவ்வொளி மொக்குவிரல்!
உமி உகிர்கள்!
தக்குத்தை தாளக்கால்!
தளிர்செம் பாதம்!
தாமரைப்பூங் குளிர்மை மணம்
உடலம் எங்கும்!

பொக்கை வாய்ப் பூமணத்தை
மோந்து மோந்து,
பூச்செண்டு மேனியின்மேல்
முகத்தால் நீந்திச்
சொக்கும் உளம்! சொக்கும் உயிர்!
சுழலும் எண்ணம்!
சொல்லழியும்; நினைவழியும்!
சொந்தம் மாயும்!

-1972
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/94&oldid=1440723" இலிருந்து மீள்விக்கப்பட்டது