பக்கம்:கனிச்சாறு 4.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 61


40

தமிழத் தம்பி, நல்ல தம்பி !


தமிழத்தம்பி நல்லதம்பி
தமிழ் படிப்பானாம் - தூய
தமிழ் படிப்பானாம்!- முன்னைத்
தாழ்வு நீங்க, வாழ்வும் ஓங்கத்
தனைக் கொடுப்பானாம்- புரட்சி
தனைத் தொடுப்பானாம்!

தமிழத்தம்பி நல்லதம்பி
தமிழ் வளர்ப்பானாம்!- பண்பு
தனை வளர்ப்பானாம்!- உயர்
தந்தனத்தோம் பாட்டுப் பாடிக்
கலை வளர்ப்பானாம்!- நல்ல
கதை நடிப்பானாம்!

தமிழத்தம்பி நல்லதம்பி
தமிழ் புரப்பானாம்!- உள்ளம்
தனை மதிப்பானாம்!- இந்தத்
தரை முழுதும் சுற்றித் திரிந்து
புகழ் தொகுப்பானாம்!- நெஞ்சின்
புரை செகுப்பானாம்!

தமிழத்தம்பி நல்லதம்பி
குலம் விரும்பானாம்!- மக்கள்
உளம் விழைவானாம்!- சமயத்
தாழ்ச்சி நீக்கி மெய்ம்மைப் பொருளைத்
தனை நினைப்பானாம்- அறிவு
தர முனைவானாம்!

-1972
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/96&oldid=1440725" இலிருந்து மீள்விக்கப்பட்டது