பக்கம்:கனிச்சாறு 4.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 கனிச்சாறு – நான்காம் தொகுதி


41

எங்கும், எதிலும் ஒழுங்கு உண்டு !


உண்ணும் வகையிலும் உறங்கும் முறையிலும்
ஒழுக்கம் உண்டு; உணர்ந்து கொள்!- தம்பி,
எண்ணும் நினைவிலும் இயற்றும் வினையிலும்
ஏற்றவை உண்டு! எண்ணிக் கொள்!

அமரும் நிலையிலும் எழூஉம் விரைவிலும்
அமைவுகள் உண்டு; அறிந்து கொள்!,தம்பி,
நிமிரும் பொழுதிலும் குனியும் பொழுதிலும்
நெறிகள் உண்டு; தெரிந்து கொள்!

உலவும் நடையிலும் உடுக்கும் உடையிலும்
ஒழுங்கு முறைகள் பலவுண்டு!- தம்பி,
குலவும் நட்பிலும் குழையும் சிரிப்பிலும்
குறைகள் நேர்வதும் மிகவுண்டு!

படிக்கும் நூலிலும் பாடும் இசையிலும்
பயிலும் ஒழுங்குகள் பலவாகும்!- நீர்
குடிக்கும் நிலையிலும் குளிக்கும் பொழுதிலும்
கொள்ளும் முறைகளும் சிலவாகும்!

உரைக்கும் சொல்லிலும் ஓய்வுப் பொழுதிலும்
ஒழுங்குகள் உண்டு! ஒதுக்காதே!- மடல்
வரையும் முறையிலும் வாங்கும் நிலையிலும்
வரைமுறை உண்டு! வழுக்காதே!

பார்க்கும் இடத்திலும் பழகும் வகையிலும்
பண்பொடு நடக்கப் பயின்றுகொள்!- தம்பி,
ஊர்க்குள், வீட்டினுள் உலகினுள்- நடக்கையில்
உயர்வாய்ப் பழகிட உணர்ந்து கொள்!

-1973
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/97&oldid=1440726" இலிருந்து மீள்விக்கப்பட்டது