பக்கம்:கனிச்சாறு 4.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 63


42

துணிந்து நில்; குனிந்து சாகாதே !


காடும் கறம்பும் உலகில் நிலவும்;
கலக்கம் உளத்தில் தோன்றும் வழக்கம்!
கேடும் துயரும் உறுதி விளைக்கும்;
கீழ்மைப் படாதே!,உன்னைக்
கெடுக்கும் நினைவும் நடுவில் முளைக்கும்;
கிறங்கி விடாதே!

மேடும் பள்ளமும் உலகில் எதிரும்;
மிரளும் மனமும்; தோன்றும் புதிரும்!
நாடும் நகரும் இடையில் உள்ளன;
நடுக்கம் கொள்ளாதே!- உன்
நலமும் வளமும் துணிவில் உள்ளன;
நசுங்கி விடாதே!

இடையில் ஆயிரம் தடைகள் நெருங்கும்;
இயற்கை அதுதான்; முயற்சிக் கொதுங்கும்!
படையில் நீயே ஒருவன் எனினும்
பதுங்கிக் கொள்ளாதே!- உன்
பாதம் நடக்கும் நடையில் வெற்றி!
பணிந்து விடாதே!

முள்ளும் கல்லும் நடையைத் தடுக்கும்;
முழக்கும் இடியும்; பெய்யும் மழையும்;
சொல்லும் இழிவும் உறுதி குலைக்கும்;
சுருண்டு விடாதே!- ஒளி
சுழற்றும் விழியில் அகலும் தடைகள்!
சோர்ந்து விடாதே!

உள்ளமும் புறமும் உண்மை சேர்க்க!
உரனும் துணிவும் மனத்தில் தேக்க!
கொள்ளும் கொள்கை தெளிவு கொள்க;
குலைந்து போகாதே!- உன்னைக்
கொல்லும் பொழுதும் வெல்லும் உறுதி;
குனிந்து சாகாதே!

-1974
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/98&oldid=1440727" இலிருந்து மீள்விக்கப்பட்டது