பக்கம்:கனிச்சாறு 4.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 கனிச்சாறு – நான்காம் தொகுதி


43

அச்சுரை எல்லாம் அறிவுரையன்று!


உண்மையுஞ் சொல்வார்;
பொய்யையும் உரைப்பார்!
உரைத்தவை சரியென நினைக்காதே!
நன்மையும் இருக்கும்;
தீமையும் இருக்கும்!
நல்லவை செய்திட மலைக்காதே!

உண்மையும் நடுங்கும்;
பொய்யதும் ஓங்கும்!
உருவத்தில் சிறப்பினைப் பாராதே!
அண்மையும் கெடுக்கும்;
தொலைவதும் உதவும்!
ஆய்ந்துகொள்; பின்பழி கூறாதே!

எல்லோரும் சொல்வார்;
எழுதுவார்; யாவும்
ஏற்றவை என்றே எண்ணாதே!
நல்லவை இருக்கும்;
நலிந்தவை இருக்கும்;
நல்லதை மட்டும் தள்ளாதே!

அன்புடன் சொல்வார்;
அழும்படி சொல்வார்!
அனைத்தையும் உயர்வென ஏற்காதே!
முன்பவர் செயலையும்
முயற்சியும் கருதி
முடிவுசெய்; பிறர்உரை கேட்காதே!

அச்சுரை எல்லாம்
அறிவுரை அன்று;
அடிப்படை யின்றி நம்பாதே!
நச்சுரை உண்டு;
நயவுரை உண்டு;
நம்புமுன் நினை;பின் வெம்பாதே!

-1975
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/99&oldid=1440728" இலிருந்து மீள்விக்கப்பட்டது