பக்கம்:கனிச்சாறு 5.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


84  தொழில்!

எத்தொழில் செய்யினும் மேன்மையென் றெண்ணு!
எவருன்னை வெறுத்தாலும் வருந்தாதே கண்ணு!

(எத்தொழில்)


புத்தெழில் [1]ஓவம் கற்றாலும் - [2]கற்
படிமத்தில் உன்மனம் ஈடுபட்டாலும்,
பித்தளை இரும்பினைக் கொண்டு வேலை
புரிந்திட ஓராவல் உனக்கு வந்தாலும்

(எத்தொழில்)


தச்சர் பணி புரிந்தாலும் - கொல்லர்
தட்டாரைப் போல் தொழில் செய்ய வந்தாலும்,
அச்சுத் தொழிலைக் கற்றாலும் - மற்ற
ஆலைத் தொழில்களை நாளுஞ் செய்தாலும்

(எத்தொழில்)


வாணிகஞ் செய்ய வந்தாலும் - பல
வண்டிகள் ஏறி நீ ஓட்ட வந்தாலும்,
காணி நிலங்கள் உழுது மாடு
காளைகளோடு நீ வேலை செய்தாலும்

(எத்தொழில்)


கடல்தனைத் தாண்ட வந்தாலும் - வான்
கப்பல் வழியாய்ப் பறக்க வந்தாலும்,
உடல் வருந்தி மலை யேறி - நீ
ஓயாது பணியாற்றும் நிலைக்கு வந்தாலும்

(எத்தொழில்)


உறுதியை உள்ளத்திற் கொள்ளு அதற்
கொண்ணாத சோம்பலை உடனே நீ தள்ளு!
இறுதிவரை யுழைத்தாலும் மன
இடர்ப்பாடு நீக்கி உழைத்தலே மேலாம்!

(எத்தொழில்)
-1967

  1. 1.ஓவம் -ஓவியம்
  2. 2. கற்படிமம் - சிற்பம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/110&oldid=1424915" இலிருந்து மீள்விக்கப்பட்டது