பக்கம்:கனிச்சாறு 5.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  79


87  சிட்டு!


மணியுடல் சிறிய சிட்டு!
மேலெலாம் மென்மைப் பட்டு!
துணிவுடன் விரிந்த வானில்
தொலைவெலாம் பறந்து செல்லும்!
பணிவுடன் அமரும்! நெஞ்சப்
பதட்டத்தில் உடல் நடுங்கும்!
அணிகுரல் முழக்கும்! கையை
ஆட்டிலும் பறந்து போகும்.

பெண்சிட்டு ஆணைக் கண்டு
பிணங்கிடும்! குலவும்! கூடும்!
பண்ணொடு பாடும்; ஆடும்!
பழகிடில் அச்சம் நீக்கும்!
பெண்ணொடே ஆணும் சேர்ந்து
பழந்தாள்கள் சருகு சேர்த்துப்
பண்ணிடும் கூடு! கூட்டுப்
பணியினால் அமைந்த வீடு!

கூட்டினுள் முட்டை வைத்தே
அடைகாக்கும் பெண்! மற் றொன்று
வீட்டினைக் காவல் செய்யும்!
விடியலில் பறந்து சென்றே,
ஈட்டிடும் உணவு! வீட்டை
இலக்கிடும் பெண்ணைக் காக்கும்!
ஏட்டினிற் படித்த தில்லை!
இயற்கையாம் வாழ்க்கை கண்டீர்!

குஞ்சுகள் தோன்ற, ஆணும்
குறுவுடல் தாயும் சேர்ந்து,
பஞ்சுடற் பிள்ளை கட்குப்
பணிசெய்யும்! உணவை ஊட்டும்!
அஞ்சிடும் குஞ்சு கட்கே,
ஆறுதல் கூறும்! நாளும்
கொஞ்சிடும்! இறக்கை வந்தால்
கூட்டைவிட் டேகும் குஞ்சே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/113&oldid=1424437" இலிருந்து மீள்விக்கப்பட்டது