பக்கம்:கனிச்சாறு 5.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  83


91  தமிழ்க் கும்மி!

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி - இளங்
கோதையரே கும்மி கொட்டுங்கடி - நிலம்
எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்
எட்டிடவே கும்பி கொட்டுங்கடி!

வையம் பிறந்த முது மொழியாம், இங்கு
வாழ்பவர்க் கெல்லாம் அது விழியாம் - உயர்
மெய்யில் விளைந்த உயிர்க் கலையாம்; அருள்
மேன்மை பழுத்த பழக் குலையாம்!

ஊழி பலநூறு கண்டதுவாம், அறி
வூற்றெனும் நூல் பல கொண்டதுவாம் - பெரும்
ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்
அழியாமலே நிலை நின்றதுவாம்!

பாண்டியன் வேல்கொண்டு காத்ததடி - உயர்
பாவியம் பற்பல பூத்ததடி, கடல்
தாண்டி மரக்கலம் ஏறி உலகெலாம்
தாவிப் பறந்தெழில் சேர்த்ததடி!

பாருக்கெல்லாம் அறம் சொன்னதடி -உயர்
பாவலர் பாச்சோறு தின்னதடி உயிர்
வேருக்குள் நல்லறம் வார்த்ததடி; பல
வேந்தர்கள் தம் அவை பார்த்ததடி!

ஆன்ற மொழியில் தனித்ததுவாம் - உயர்
ஆங்கிலர்க்கும் நன்கினித்ததுவாம்! - மண்
தோன்றி வளர்ந்த உயிரினத்தின் வெற்றி
தோல்வியை எண்ணிக் கணித்ததுவாம்!

கழகம் வளர்த்தநற் செல்வியடி - தொல்
காப்பியர் ஊட்டிய கல்வியடி! - அறம்
பழகுசெந் நாப்புல வோர்பலர் பேணியே
பாங்குறக் காத்த புதல்வியடி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/117&oldid=1424928" இலிருந்து மீள்விக்கப்பட்டது