பக்கம்:கனிச்சாறு 5.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  89


ஆங்கிலம் நம்மின் அடிமையை மீட்டது!
தீங்குசெய் 'சாதி'யின் இழிவைத் தீய்த்தது!
உலக ஒற்றுமை உணர்வை வளர்த்தது!
கலக மாந்தரின் கயமையைப் புதைத்தது!

இலகு நூல்கள் பற்பல இயல்வது!
உலகத் தொடர்புக் கென்றும் உகந்தது!
அறிவை மதிப்பவர் அறிவு மொழி,அது!
அறிஞரை மதிக்கும் அறிஞர் மொழி,அது;
பாலில் கலந்த நஞ்சினைப் போலக்
காலப் போக்கில் தமிழில், தமிழரில்
கலந்து விட்ட கயமையை உணர்த்தி
நலந்தரும் வழியை நமக்கறி விப்பது!

எனவே, தம்பி இனிமைத் தமிழுடன்
ஆங்கில மொழியிலும் அறிவைப் பெறுக,நீ!
'அகம்' - தமிழ் மொழியெனில், ஆங்கிலம் 'புற’மாம்!

புகப்புக இன்பம் புகுத்தும் தமிழ்மொழி!
தொகத்தொக வாழ்வைத் துலக்கிடும் ஆங்கிலம்!
தகுமிவ் விரண்டையும் தவறாது கற்றுவா!

பன்மொழி யறிவதும் தவறிலை; எனினும்
இன்புறு வாழ்விற் கிருமொழி போதுமே!
கல்வி என்பது கருத்தை அறிவது;
பலவாம் மொழிகளைப் பயிலுதல் அன்று!

-1968
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/123&oldid=1424944" இலிருந்து மீள்விக்கப்பட்டது