பக்கம்:கனிச்சாறு 5.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


94  பள்ளித் தொடக்கப் பாட்டு!

கண்கள் விழித்தன; செவிகள் திறந்தன;
கருத்துகள் முளைத்தன உள்ளத்திலே!
பண்கள் பிறந்தன; பாக்கள் எழுந்தன;
பாய்ந்திடுவோம் கல்வி வெள்ளத்திலே!

இளம்புது நெஞ்சம்; இளம்புது மூளை;
இணைந்தன ஒன்றாய்க் கூடத்திலே!
வளம்பெறும் அறிவே வாழ்க்கையின் பூக்கள்!
வந்தமர் வீர் கல்வி ஓடத்திலே!

கைகள் புதியன; கால்கள் புதியன;
காண்பன முற்றும் விளைநிலங்கள்!
பைகள் முழுதும் புதுப்புது நூல்கள்!
பாய்வதால் நிரம்பும் உளக்குளங்கள்!

புத்தம் புதிய சிறுமலர் நெஞ்சம்!
புகுவிழா நடத்தும் அறிவுமனை!
தொத்திப் படரும் இளம்பசுங் கொடிகள்!
துருதுரு வென்னும் உணர்வுமுனை!

பெரியதோர் உலகம்! பெரிதகல் வானம்!
பேசிடப் பேசிடப் புதுப்பெருமை!
அரிதாய் முளைத்த மாந்தரின் முளைகள்!
அடடா! காண்போம் பெரும்புதுமை!

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/124&oldid=1424946" இலிருந்து மீள்விக்கப்பட்டது