உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 5.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  91


95  ஊனையும், உயிரையும்
வளர்ப்பது கல்வியே!


வேனில் கழிந்தது; கார் தொடங் கிற்று!
வீணில் திரிந்த நாள்கள் கழிந்தன!
தொடங்கிற்று பள்ளி! துள்ளிச் சென்றாய்!
முடங்கிய கல்வியை முடுக்கி விட்டாய்!

உன்னுடன் பயின்ற சிறுவரில் ஒருசிலர்
முன்னைய வகுப்பிலே முடங்கியும் இருப்பார்!
பலர் உன் போலவே தேறியும் இருப்பார்!
தேறியோர் யாவரும் திறலோர் அல்லர்;
தோற்றார் யாவரும் அறிவிலார் அல்லர்;
வெற்றியும் தோல்வியும் விளைவைப் பொறுத்தது!

கதையறி வாயா? காணி நிலத்தில்
விதைத்த கை நிறைந்தது! விதையாக் கை வெறுங்கை!
கல்வி நிலத்தின் கதையிலும் முடிவதே!
சொல்வதைக் கேட்டவன் கேட்டதை எழுதினான்;
கேளாக் காதன் கேள்வியை விட்டான்.
விடியப் படித்தவன் வெற்றியைப் பெற்றான்;
விடிந்துந் தூங்கியோன் தேர்வினில் விழித்தான்.
போனவை எல்லாம் போகட்டும் தம்பி!
வென்றார் யாவரும் செருக்கவும் வேண்டா;
தோற்றார் யாவரும் துவளவும் வேண்டா!
துணிவு கொள்க தோற்றவர் யாவரும்!
இனிவரும் ஆண்டில் என்ன செய்வது?

புத்தம் புதிய பொத்தக வரிசை!
எத்தணை அறிவு! எத்துணை மகிழ்ச்சி!
பொத்தக முழுதும் தேன்துளி எழுத்துகள்!
முத்தெனக் கோத்த கருத்து மாலைகள்!
ஒவ்வொரு வரியும் ஒவ்வோர் அறிவு!
ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு தேன்குடம்!
ஒவ்வொரு நூலும் ஒவ்வோர் அறிஞர்!
எத்தனை அறிஞர்உன் பக்கலில் என்றுபார்!
அடடா! அவர்தரும் அறிவுக் கீடெது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/125&oldid=1841511" இலிருந்து மீள்விக்கப்பட்டது