பக்கம்:கனிச்சாறு 5.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


தொடக்கத் திருந்தே அவர்பின் தொடர்க!
கடக்க லாகாக் கல்விக் கடலைக்
கடப்பதும் எளிது; கற்றலும் எளிதே!
படிக்கப் படிக்கப் படிவதே படிப்பு!
குடிக்கக் குடிக்கத் தேனும் தெவிட்டும்!
ஆனால் கல்வியோ ஆவலைப் பெருக்கும்!
கற்றவர் என்றும் கற்கிலோம் என்பார்;
கல்லா தவரோ கற்றோம் என்பார்;
முற்றக் கற்றவர் எங்கணும் இல்லர்;
கல்லா மூடரோ எங்கணும் இருப்பர்!

கல்விப் பெருமை கழறொணாப் பெருமை!
'செல்வப் பெருமை சிதடரும் பெறுவர்,

எனவே தம்பி, இன்றே தொடங்கு!
மனமொரு தும்பி! கல்வியோ மணமலர்!
தேனெனும் அறிவைத் திரட்டுக தம்பி!
ஊனையும் உயிரையும் வளர்ப்பது கல்வியே!

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/126&oldid=1425732" இலிருந்து மீள்விக்கப்பட்டது