பக்கம்:கனிச்சாறு 5.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


99  ஓய்வும் பயனும்!

ஓய்வாக இருக்கையில் தம்பி - நீ
ஓவியம் வரைந்து பழகு!
தூய்மையோ டமைதி சேரும்! - நன்கு
தோன்றிடும் உள்ள அழகு!

பாக்களும் இயற்றிப் பழகு - நல்ல
பாடலைப் பாடி மகிழ்வாய்!
தாக்குறும் துன்பம் யாவும் - இசைத்
தமிழினில் மாய்ந்து போகும்!

கதைகளும் எழுதிப் பழகு - பூங்
காவினில் உலவி வருவாய்!
புதைந்திடும் அறிவு வளரும் மனம்
புதுக்கிடும் வாழ்வு பெறுவாய்!

அறிவியல் ஆய்வு செய்வாய் - நீ
அன்றாடச் செய்தி படிப்பாய்!
செறிவுறும் உன்றன் அறிவு - உளச்
செழுமையும் வலிவும் பெறுவாய்!

மருத்துவ நூல்கள் கற்பாய் - உடன்
மனநூலும் தேர்ந்து கற்பாய்!
திருத்தமெய்ந் நூல்கள் அறிவாய் - வருந்
தீமையும் பொய்யும் களைவாய்!

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/132&oldid=1425741" இலிருந்து மீள்விக்கப்பட்டது