பக்கம்:கனிச்சாறு 5.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  99


100  மழை!

வானம் கருத்தது;
முகிலும் பொழிந்தது;
மழை! மழை! மழை!
மேனி நனைந்தது!
குளங்கள் நிறைந்தன!
மழை! மழை! மழை!

மின்னல் கீற்றுகள்!
இடிமுழக் கங்கள்!
மழை! மழை! மழை!
இன்னல் தீர்ந்தது!
எங்கும் குளிர்ந்தது!
மழை! மழை! மழை!

மப்பு! மந் தாரம்!
மஞ்சின் மூட்டம்!
மழை! மழை! மழை!
தொப்பரை யாய்உடை
முற்றும் நனைந்தது!
மழை! மழை! மழை!

உரித்த நுங்குபோல்
ஒளிமழுங் கியது;
மழை! மழை! மழை!
பொரித்திடு கறிபோல்
சளசள ஓசை!
மழை! மழை! மழை!

இறங்கிய நீர்ச்சரம்
ஏழையின் கண்ணீர்!
மழை! மழை! மழை!
உறங்கிய உலகம்
உயிர்த்தொளி பெற்றது;
மழை! மழை! மழை!

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/133&oldid=1425743" இலிருந்து மீள்விக்கப்பட்டது