பக்கம்:கனிச்சாறு 5.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


101  நூலகம்!

நூலகம் இலாதது பாழகம் ஆகும்!
நல்லறிவு அன்பு அங்கு சாகும்;
உடல் வேகும்!
ஒளி போகும்!
இருள் ஆகும்!

நூற்களைக் கண்டாலே அறிவு சிலிர்க்கும்!
நுகர்ந்திடா இன்பம் துளிர்க்கும்!
உயிர் களிக்கும்!
உளம் குளிக்கும்!
பிற புளிக்கும்!

அறிஞரின் உளமோ, அருந்துநீர்க் குளமாம்!
அன்றன்று நிறைந்திடும் உளமாம்!
முப் பழமாம்;
பெரு நலமாம்;
பின் வளமாம்!

செறிந்திடும் நூல்களால் சிறந்திடும் நாடும்!
செரித்திட உள்ளொளி கூடும்;
மெய் தேடும்;
கூத்தாடும்;
உயிர் பாடும்!

சுவடிச் சாலைகள் உளமலர்க் காடு!
சூழ்நெஞ்சம் கட்டுதேன் கூடு!
அறிவோடு;
நலந் தேடு;
தனி நாடு!

உவகைப் பெருங்கடல்! உலகச் சுருக்கம்!
உணர்வு பொழிந்தநீர்ப் பெருக்கம்!
மெய்த் தருக்கம்!
உள நெருக்கம்;
வாழ்வுச் சுருக்கம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/134&oldid=1425740" இலிருந்து மீள்விக்கப்பட்டது