பக்கம்:கனிச்சாறு 5.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  103


103  மூட ஆமை!

குளம் ஒன்றில் ஆமையும்
கொக்கு இரண்டும் வாழ்ந்தன!
குளத்தில் தண்ணீர் வற்றவே
கூடி மூன்றும் வருந்தின.

அண்டை ஊரில் உள்ளதோர்
அழகுக் குளத்தை நாடியே
இரண்டு கொக்கும் போகவே
எண்ணி முடிவு செய்தன.

அதனைக் கண்ட ஆமையும்
அழுதே, “அண்ணன் மார்களே
இதனை விட்டுப் போகவே
எனக்கும் உதவி செய்யுங்கள்;

நன்மைக் கால முற்றிலும்
நட்புச் செய்து வாழ்ந்தவர்,
துன்பம் கண்ட போதிலே
துறந்து போதல் இல்லையே!

என்று கூறி வேண்டவே
இரண்டு கொக்கும் அதனிடம்
"நன்று நன்று; தம்பியே!
நாங்கள் பறந்து செல்லுவோம்!

நீயும் வருவ தெப்படி?
நெடுந்தொலைவும் ஆனதே!
காயும் வெய்யில் கருக்குமே!
கால்கள் சோர்ந்து போகுமே!

என்று கூறிக் கொக்குகள்
இரண்டும் வருந்தி நாளெல்லாம்
ஒன்று கூடி ஆய்ந்தன!
உளவும் ஒன்று கண்டன!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/137&oldid=1425745" இலிருந்து மீள்விக்கப்பட்டது