பக்கம்:கனிச்சாறு 5.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  107


106

ஆடுக தமிழ் ஊஞ்சல்!


இன்பத் தமிழ் மொழிக்கே
ஏற்றம் பிறந்ததென
அன்புத் தமிழ்க்கிளியே!
ஆடுக ஊஞ்சல்! - இந்த
ஆலங் கிளைகுலுங்க
ஆடுக ஊஞ்சல்!

அற்றைத் தமிழ்மொழிக்கே
ஆக்கம் பிறந்ததெனக்
கற்றைக் குழல்பரக்க
ஆடுக ஊஞ்சல்! - உன்
காதோரந் தென்றல்வர
ஆடுக ஊஞ்சல்!

முத்துத் தமிழ்மொழிக்கே
மொய்ம்பு பிறந்ததெனக்
குத்து விளக்கே, நீ
ஆடுக ஊஞ்சல்! - உன்
குவளை விழிமலர
ஆடுக ஊஞ்சல்!

அன்னைத் தமிழ்மொழிக்கே
அரசு கிடைத்ததெனக்
கன்னித் தமிழ்மகளே
ஆடுக ஊஞ்சல்! - உன்
கன்னம் சிலிர்சிலிர்க்க
ஆடுக ஊஞ்சல்!

கழகத் தமிழ்மொழிக்கே
காலம் மலர்ந்ததெனக்
குழகத் திருமயிலே
ஆடுக ஊஞ்சல்! - உன்
கொம்மை மதர்ந்தெழவே
ஆடுக ஊஞ்சல்!

-1974
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/141&oldid=1444843" இலிருந்து மீள்விக்கப்பட்டது