பக்கம்:கனிச்சாறு 5.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  113


111

நாய்!


விருந்தினர் வந்தால் முன்னர்
வரவேற்கும் உரிமை யாளன்!
தெரிந்தவ ரன்றி முற்றும்
தெரியாதார் வந்து விட்டால்
எரிந்தவர் முன்னர் வீழ்ந்தே
எதிர்த்திடும், காவற் காரன்!
பரிந்தவர் தடவி விட்டால்
பணிந்திடும் அடிமை யாளன்!

தொலைவழி, தனி வழிக்குத்
துணையான அன்பன்! காட்டு
மலைவழிச் செல்லு வோர்க்கு
மறவனாம் ஆனால் தன்போல்
நிலையுள்ள நாய்கட் கெல்லாம்,
நிலையான வைரி! உண்ட
இலைவிழும் எச்சில் தொட்டி,
இடுகளம் வெல்லும் வீரன்!

பிள்ளைக்குப் பள்ளித் தோழன்!
பூனைக்கோர் எதிரி! கூண்டுக்
கிள்ளைக்குக் கூட்டாள்! எங்கள்
கிழவிக்குக் கைக்கோல்! சுற்றும்
கள்ளர்க்குத் ‘தாணா’க் காரன்!
காத்தலில் அரசன்! நாயின்
பிள்ளைக்குத் தந்தை! பெற்ற
நாயுக்குக் கணவன் கண்டீர்!

-1976
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/147&oldid=1444851" இலிருந்து மீள்விக்கப்பட்டது