பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 117
115
கையைப் பிடித்துக்கொள் அண்ணா!
கையைப் பிடித்துக்கொள் அண்ணா - என்னைக்
கண்போலக் காத்திடு அண்ணா!
வெய்யிலில் காயவிடாமல் - என்னை
வீட்டுக்குக் கூட்டிச்செல் அண்ணா!
மிதிவண்டி யின்பின்னால் ஏற்றி - என்னை
மெதுவாகக் கொண்டுசெல் அண்ணா!
அதிராமல் அசையாமல் ஓட்டு! - அப்பா
அம்மாவுக் குன்திறம் காட்டு!
-1979
116
சீராடுவது ஏன்?
தலைவாராமல் பூச்சூடாமல்
தனியே நின்றேன் சிணுங்குகிறாய்? - பொற்
சிலையே நீஏன் பள்ளிசெல் லாமல்
சீராடிக் கண் கலங்குகிறாய்?
வண்ணப் பட்டை இருபுறம் கட்டித்
தலையை வாரிப் பின்னிடுவேன்! - உன்
எண்ணப் படியே பட்டுச்சட்டை
எடுத்துத் தருவேன்; பூவைப்பேன்!
தோளில் பையைத் தொங்கப் போட்டுத்
துள்ளிப் போவாய் மான்போல! - ஒரு
நாளில் உனக்குப் பூக்குடை வாங்கி
நாட்டித் தருவேன் வான்போல்!
காலில் செருப்பை அணிந்துகொள்வாய்!
கையை வீசிச் சென்றிடுவாய்! - பைம்
பீலி விரித்த மயிலின்குஞ்சே!
பிள்ளைக் கிளியே! மான்கன்றே!
-1979