பக்கம்:கனிச்சாறு 5.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120  கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி


119

யார் என்ன செய்தார்கள்?

(எடுப்பு)

அம்மா உங்களை என்ன செய்தார்? - அன்பு
அப்பா உங்களை என்ன சொன்னார்? - ஏன்
உம்மென முகங்களை வைத்துக் கொண்டீர்?
ஒன்றும் பேசாமல் நின்று கொண்டீர்?

(தொடுப்பு)

பள்ளிப் படிப்பினில் தேர்விலே ஒவ்வொரு
பாடத்தும் எண்கள் குறைந்ததா? - இல்லை
பிள்ளைகள் எவரிட மாகிலும் சண்டையில்
பிணக்குகள் வந்திட நேர்ந்ததா? (அம்மா)

செய்துவைத்த, ‘பலகார’த்தைத் தின்றதால்
சீற்றமும் அன்னைக் கெழுந்ததா? இல்லை
கொய்துவைத் த,முல்லைப் பூக்களை நூலிலே
கோக்கையில் திட்டு விழுந்ததா? (அம்மா)

கடைநோக்கிப் போகையில் வேடிக்கை பார்த்ததால்
கைதந்த காசும் தொலைந்ததா? - இல்லை
நடையும்கொண் டாட்டமாய் வருகையில் கையுள்ள
நல்லெண்ணெய்ச் செப்பும் கவிழ்ந்ததா? (அம்மா)

அப்பாவின் மிசையினில் இழுவையில் அவர்வைத்த
அடிக்கோலும் காணாமல் போனதா? - இல்லை
தப்பாக வீட்டுக் கணக்குகள் செய்ததால்
தந்தையார்க் குச்சினம் ஆனதா? (அம்மா)

புதிதாக வாங்கிய பொத்தகத் தில்ஏதும்
போக்கடித் தீர்களா பள்ளியில் - இல்லை
எதிராகப் பேசிட முதுகினில் அப்பளம்
ஏற்றீர்களா சினக் கொள்ளியில்! (அம்மா)

பொங்கல் விழாவுக்குப் புதுச்சட்டை தைத்திடப்
போதாது வருமானம் என்றாரா? - இல்லை
தொங்கல் தொடரிக்குப் போராட்டங் கட்டியே
தொப்புதிப் பென்றுதை தின்றீரா? (அம்மா)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/154&oldid=1444882" இலிருந்து மீள்விக்கப்பட்டது