பக்கம்:கனிச்சாறு 5.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  123


122

நம்பிக்கைகள் பல உண்டு!


நம்பிக்கைகள் பல உண்டு! - அவை
நம்பிக் கெடுதற்கும் ஆட்கள்இங் குண்டு!
தம்பி, எது எதனாலே - ஒன்று
தாழ்வுறும் வாழ்வுறும் - தேர்க முன்னாலே!

முந்தி நடப்பதனாலே - ஒன்று
முன்னேறும் என்பது முயற்கதை போல!
பிந்தி நடப்பதும் வெல்லும் - ஆனால்
பிந்துவ தெல்லாமே வெல்லுமோ? சொல்லும்!

சொந்த முயற்சிகள் வேண்டும் - இடைச்
சோம்பலும் மயங்கலும் தயங்கவே தூண்டும்!
வந்தவழி திரும்பாதே! - எனில்
வருகின்ற வழியெல்லாம் செலவிரும் பாதே!

ஆடுபோல் அங்குமிங் காகத் - தேடி
அலையாதே; குலையாதே; மனஞ்சிதறாதே!
நாடுமொழி இனம் நாடு! - ஒன்றை
நாடிய பின்கையை எதற்கும்உத றாதே!

தந்தன தோம்தரி கிடதோம்,எதும்
தாழ்ந்தபின் உயர்வது பெரும்இட ராய்ப்போம்!
சிந்தனை செய்! ஒன்று தேர்வாய்! - பின்னர்
செயலொன்றை செயல் - என மனம், வினை நேர்வாய்!

திந்திமி தோம்திமிதோம் தோம் - அட
தேவையி லாத நினைவுகள் போம் போம்!
நம்பிக் கைகள் பல உண்டு.

-1982
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/157&oldid=1444895" இலிருந்து மீள்விக்கப்பட்டது