பக்கம்:கனிச்சாறு 5.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  125


124

மென்னீர்க் குமிழிகள்!


வழலை நீரில் குழலைத் தோய்த்து
வாயால் அண்ணன் ஊதினான்! - அட!
சுழல் சுழலாக மென்னீர்க் குமிழிகள்
சுழன்றன! மிதந்தன! மின்னின!

சிறிதும் பெரிதுமாய்ப் பன்னிறக் குமிழிகள்
சீர்த்தன! பூத்தன! பொங்கின! - அட!
வறிதே தோன்றின! வறிதே மறைந்தன!
‘வாழ்க்கையும் இதுதான்’ என்றன!

கையில் நனைந்தன! தலையில் வெடித்தன!
கன்னம் தீண்டி உடைந்தன! - அட!
பொய்யில் பூத்த புகழுரை போலப்
பொங்கின! மங்கின! காய்ந்தன!

காற்றில் தோன்றின! காற்றில் மிதந்தன!
காற்றில் கரைந்தன, குமிழிகள்! - அட!
தோற்றமும் வாழ்வும் மறைவும் எல்லாம்
துல்லிய மாகவே விளங்கின!

-1982
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/159&oldid=1444898" இலிருந்து மீள்விக்கப்பட்டது