பக்கம்:கனிச்சாறு 5.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126  கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி


125

மூடர்கள் வாழ்கின்ற காலமிது!


மூடர்கள் வாழ்கின்ற காலமிது! - தம்பி
முழுவிழிப் பாயிரு வாழ்க்கையிலே! - பெருங்
கேடர்கள் மேன்மேலும் ஏறுகின்றார்! - கொடுங்
கீழ்மையை உயர்வென்று கூறுகின்றார்!

தீமைகள் நல்லவை போலிருக்கும்! - பெருந்
திருடர்கள் கையிலும் நூலிருக்கும்! - வெறும்
ஊமையர் போல உலாவருவார்! - பல
ஊறுகள் செய்து துயர்தருவார்!

ஆரவா ரங்கள் பலகோடி! - வெறும்
ஆர்ப்புரை வீண்செயல் ஊர்முழுதும்! - பகல்
நேரம் இரவென்று பார்ப்பதில்லை! - உரை
நேர்மையில்லை; செயல் கூர்மையில்லை!

இப்படி அப்படிப் பொருள்குவிப்பார்! - அதற்
கிழிவுகள் தாழ்வுகள் பார்ப்பதில்லை! - பல
செப்படி வேலைகள் செய்திடுவார்! - அவை
சிறப்பெனப் பகட்டாய்ப் பெயரிடுவார்!

-1982


126

எவர்க்கும் பயனாய் இரு!


உன்னால் உலகம்
பெறுவதொன் றுண்டாம்!
உணர்வாய் என்றும்
தம்பி! - உனக்கு
முன்னால் பிறந்தோர்
இறந்தோர் பலபேர்!
முகவரி இல்லை, தம்பி!

பிறந்தோர் எல்லாம்
சிறந்தோர் ஆகார்!
பெரும்பயன் உடையது
பிறவி! - உலகில்
இறந்தோர் தம்மில்
இருப்போர் பலபேர்!
எவர்க்கும் பயனாய் இருப்பாய்!

-1983
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/160&oldid=1444904" இலிருந்து மீள்விக்கப்பட்டது