உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 5.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


139

எங்கள் வீட்டுச் சுட்டிப் பையன்!


எங்களது வீட்டில்ஒரு
சுட்டிப் பையன்!
எங்கள் மகள் செந்தாழை
பெற்றெடுத்தாள்!
திங்கள் முகம்! ‘மேக’ முடி!
அகன்ற கண்கள்!
திருதிருக்கும் இருவிழிகள்!
துடிப்புப் பேச்சு!

தங்காத இருகால்கள்!
தை தை ஆட்டம்!
துருதுருக்கும் இரு கைகள்!
துள்ளுடம்பு!
மங்காத சுறுசுறுப்பு!
மாய்வதில்லை!
மற்றதெல்லாம் நேரில் வந்து
பார்க்க வேண்டும்!

சிறுகால்கள் தெருவோடும்!
அம்மும்மா கால் -
சித்தியின் கால் - அத்தனையும்
சேர்ந்தே ஓடும்!
அறுகைகள் தூக்கி வரும்!
படுக்க வைக்கும்!
அடுத்த நொடி சடக்கென்று
வெளியே பாயும்!

தடாலெனவே நீர்ச்செம்பு
தலைவீழ்ந் தோடும்!
தலைதெறிக்கப் பாய்ந்தோடும்
குவளை, கிண்ணம்!
மிடா, தவலை நீரெல்லாம்
தளதளக்கும்!
மெத்தை,தலை யணைகளெல்லாம்
மிதிபட் டேங்கும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/172&oldid=1842443" இலிருந்து மீள்விக்கப்பட்டது