பக்கம்:கனிச்சாறு 5.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  149


146

ஒழுங்கிலான்!


உற்ற கல்வியும் ஓர்ந்த கேள்வியும்,
பெற்றோ னாயினும் பெரியோ னாயினும்,
ஒழுங்கிலா தொருவனை விலங்கே என்க!

-1952


147

சில பண்பிலக்கணக் கூறுகள்!


1. வாழ்க்கை ஒன்றே! அதுதான் வழக்குற்று
வீழ்க்கை யில்லா விறலுடைத் தென்க!

2. மானம் ஒன்றே! அதுதான் மயலுற்றே
ஏனம் ஏந்தா ஏறுடைத் தென்க!

3. பெருமை ஒன்றே! அதுதான் பீடுற
அருமை காக்கும் ஆண்மைய தென்க!

4. நாணம் ஒன்றே! அதுதான் நலிவினும்
மாணழிந் துய்யா மறலுடைத் தென்க!

5. உயிரும் ஒன்றே! அதுதான் உடற்கென
வயிறும் பேணா வாயுடைத் தென்க!

6. ஒழுக்கம் ஒன்றே! அதுதான் உயிர்க்கே
இழுக்கந் தேடா இயல்புடைத் தென்க!

7. ஏற்றம் ஒன்றே! அதுதான் இழிவினும்
மாற்றங் கொள்ளா மாண்புடைத் தென்க!

8. கொள்கை ஒன்றே! அதுதான் குலைவினும்
எள்ளல் சேரா ஏற்புடைத் தென்க!

9. பூட்கை ஒன்றே! அதுதான் புகழ்க்கென
வேட்கை பேணும் விம்மிதம் என்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/183&oldid=1444959" இலிருந்து மீள்விக்கப்பட்டது