பக்கம்:கனிச்சாறு 5.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  161


167

மூன்று நல்லுணர்வுகள்!


ஒருவன்உனை மேய்த்தாலும்,
ஒருவன்உனை ஏய்த்தாலும்,
தெருவழியில் நீ ஒருநாள்
இரவலனாய்த் திரிந்தாலும்,
கருவறையில் சிறையிருக்கக்
காலம் உனைச் செய்தாலும்,
திருவுளத்தில் ‘பொய்’என்னும்
‘தீங்குணர்வைக் கொள்ளாதே!’

பசித்திருந்து நீரின்றிப்
பட்டினியாய் நீ பலநாள்
விசித்தழவே நேர்ந்தாலும்,
விரலொடிய உழைத்தாலும்,
நசித்தழுகும் பொருள்நசையால்
நயமின்றிப் பிறரீட்டம்
புசித்திடவே ‘திருட்’டென்னும்
‘புன்செயலைச் செய்யாதே!’

பழியுரையால் பகைவருனைப்
பதைபதைக்கச் செய்தாலும்,
இழிவுரையுன் உள்ளத்தில்
ஈட்டியெனப் பாய்ந்தாலும்,
அழிவில்லாப் பொறையுளத்தால்
அவற்றையெலாம் நீ,தாங்கி
ஒழிவில்லா முயற்றுழைப்பால்
‘உயர்கடமை மறவாதே’!

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/195&oldid=1444972" இலிருந்து மீள்விக்கப்பட்டது