பக்கம்:கனிச்சாறு 5.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௨

கனிச்சாறு ஐந்தாம் தொகுதி


82. தூங்கிக் கொண்டிருக்கும் தம்பியைத் தட்டி எழுப்பி - அவன் என்ன செய்யவேண்டும் என உணர்த்துகிறார் பாவலரேறு. இப்பாடல் தமிழ்ச்சிட்டு முதல் இதழின் (ஆகத்து 1966) முதல் பாடல் எனும் சிறப்புடையது மட்டுமல்லாமல், 1965- திசம்பர்த் திங்கள் 25ஆம் நாள் கீழ்வெண்மணியில் நடந்த சாதிவெறிக் கொடுமை நிகழ்ச்சியினைச் சுட்டிக் காட்டியுள்ளார் பாவலரேறு. மேலும் இம்முதல் பாடலிலே பயிலப்பெற்ற 'பள்ளிப் பறவை' எனும் சொற்றொடராலேயே பள்ளிப் பறவைகள்' - எனும் குழந்தைப்பாடல் நூலும் வெளியிடப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

83. சினத்தைப் பழகாதே தம்பி - என்று சினத்தால் நேர்ந்திடும் தீமைகளை விளக்குகிறது இப்பாடல்.

84. தொழிலில் இழிவு, சிறப்பு என்றில்லாமல் எத்தொழில் செய்யினும் மேன்மை என்றே எண்ணவும், அதனால் எவர் வெறுத்தாலும் வருந்தக்கூடாது என்றும் பண்படுத்துகிறார் பாவலரேறு.

85.நல்லொழுக்கங்கள் பலவற்றையும் பட்டியலிட்டு ஒன்றொன்றாய்ப் பழகிக்கொள்ளச் சிறுவர்களுக்கு அறிவுறுத்துகிறது பாடல். - 86. மலர்களின் அழகை வியந்தும் அதை நாடுவோர் ஒவ்வொருவரின் உணர்வையும் சொல்லும் எளிமையான இசைப்பாடல்.

87. சிட்டுக்குருவியின் வாழ்க்கை ஒழுங்கை வியந்து பாடியது. அது கல்வி பயிலாமலேயே வியப்பான வாழ்க்கை கொண்டுள்ளதை விளக்கும் பாடல்.

88. நிலக்கரியால் ஓடுகிற புகைவண்டியின் ஓட்டத்தைக் குழந்தைகளுக்கு அழகுற விளக்கும் எளிய இசைப் பாடல்:

89. உடலுறுப்புகளுக்குள் தங்களில் யார் பெரியவன் என்ற சண்டை ஒருநாள் மூண்டது. அவை ஒவ்வொன்றும் தானே பெரியவன் என்று வழக்காடின. இறுதியில் வயிறு அவற்றிற்கு அறிவுரை கூறி அமைதியை உண்டாக்கியது-போன்ற கற்பனையில் விளைந்த - நல்ல கருத்துள்ள அழகுப்பாடல்.

90. துன்பத்திற்குத் துவளாமல் இரு; கல்விநலன் உன்னைக் காத்து வரும் தம்பி - என்று சிறுவர்க்குத் துணிவாய்ச் செயல்படப் பழக்குகிறது இப்பாடல்.

91. செந்தமிழின் சிறப்பை யெல்லாம் ஒவ்வொன்றாய்ச் சொல்லி எட்டுத்திசையிலும் அதன் சுடரை ஏற்றிடத் தமிழ்க்கும்மி கொட்டிடும் கும்மியடி இசைப்பாடல்.

92. அடித்துக் கொண்டேயிருக்கும் காற்றுபோல்,படித்துக்கொண்டே யிருக்கும் உள்ளத்தின் இயல்பைக் கொண்டு இயற்கையின் பேரறிவை வாரி உண்ணச் சொல்லும் இந்த உயர்ந்த பாடலில் கல்விக்குத் தாழ்ப்பாள் இல்லை எனச் சுட்டுகிறார் பாவலரேறு.

93. தமிழின் பெருஞ்சிறப்பையும், தமிழும் ஆங்கிலமும் கற்க வேண்டிய தேவையையும் விரித்துரைக்கும் பாடல். ஆங்கிலர் வரவால் தீங்குசெய் சாதியின் இழிவு தீய்க்கப்பட்டதைச் சுட்டி ஆங்கிலத்தை இணைந்து கற்கக் கூறும் பாடல் இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/23&oldid=1424489" இலிருந்து மீள்விக்கப்பட்டது