பக்கம்:கனிச்சாறு 5.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உ௬

கனிச்சாறு ஐந்தாம் தொகுதி


136. தம்பி தங்கைகள் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதால் எந்த அளவு உடலும் உணர்வும் வலுப்பெறும் என உணர்த்துகிறது இப்பாடல்.

137. கைபிடித்து அழைத்துச் செல்லுமாறுக் கேட்கும் அம்மாவைப் பார்த்துப் பிள்ளை "தான் என்னவெல்லாம் செய்வேன்”- என்று அம்மாவுக்குச் சொல்லுவதான குழந்தைப் பாடல்.

138. நீந்துவதால் உடல் எந்த அளவு உரமேறும் எனச் சிறுவர்க்கு உணர்த்துகிறது இப்பாடல்.

139. செந்தாழை மகன் செந்தணல் சிறியவனாய்ச் செய்த குறும்புகளின் அழகான படப்பிடிப்பாய்ப் பாடல்.

140. சிறுவர்கள் பின்பற்ற வேண்டிய பத்துக் கட்டளைகளைக் கூறுகிறது இப்பாடல்.

141. சிட்டுக் குருவியைப் பார்த்து, உன் இனத்தில் மதமும் சாதியும் உண்டா ? என வினா எழுப்பிச் சிறுவர்களைச் சிந்திக்க வைக்கிறது இப்பாடல்.

142. நம்மைச் சுற்றியுள்ள இயக்கம் முழுவதையும் அறிதலே நம் வாழ்வின் நலனைப் பேணும் - என்கிறது இப்பாடல்.

143. நாட்டமின்றி இருந்ததால் நலமிழந்ததைக் கூறி நாட்டுரிமை நிலைநாட்ட வேண்டி அறிவுறுத்தும் பாடல்.

144. “தமிழ்த்தாயின் பெருமைகளைச் சொல்லி ஆடிப்பாடுவீர் குழந்தைகளே” எனத் தமிழ்த்தாயின் பெருமைகளை நிரல்படுத்துகிறார் பாவலரேறு.

145. மாணவப் பருவமே அடித்தளம் அமைத்திடும் பருவம். அப்பருவத்தில் பல்துறை அறிவினையும் முழுமையாய்ப் பெறுவதே கடமை. அம்மாணவரின் எழுச்சிகளும் புரட்சிகளும் பெரும் பயன் நல்கும்படி அமையுமாறு பாடுகிறார் பாவலரேறு.

- மணிமொழிமாலை-

146. கல்வி, கேள்வியில் சிறந்தோனாயினும் ஒழுங்கிலான் விலங்கினையொத்தவனே என்கிறார் பாவலரேறு.

147. வாழ்க்கை பற்றியும் வாழ்வியல் கூறுகளுக்குமான பண்பிலக்கணங்களை மணிமொழிகளாகவும் வரையறுக்கிறது இப்பாடல்.

148. வாழ்க்கையின் நற்பண்புகளை மிகச் சுருக்கமாக வரையறுத்துச் சொல்கிறது இப்பாடல்.

149. காய் கனியாமல் வெம்பிப் போனால் பயனில்லை. ஆகவே அரும் பணி புரிந்து கனிபோல் பயன் தருவோம் என அறிவுறுத்துகிறார் பாவலரேறு.

150. “ஒரு நொடிப்பொழுதும் ஓயாமல் உலக விரிவில் உன்னை விரித்துக்கொண்டு பெரும்பயன் பெறுவாய்”- என்கிறது பாடல்.

151. மக்களின்ஏற்றம் கருதிப் பேசிடவும், கடமை, ஒழுங்கைக் கைக்கொண்டிடவும் கூறுகிறது இப்பாடல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/27&oldid=1424493" இலிருந்து மீள்விக்கப்பட்டது