பக்கம்:கனிச்சாறு 5.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  13


12  வானக் கப்பல் !

வானங் கிழிய இரைச்சல் போட்டு
வானக்கப்பல் பறக்குமாம்! - அதில்
நானும் நீயும் ஏறிக் கொண்டால்
இலண்டனில் போய் இறக்குமாம்!

முகிலுக் குள்ளே பாய்ந்து விண்ணில்
முன்னும் பின்னும் சாயுமாம்! - அது
பகலில் இரவில் வானக் கடலில்
பறந்து திரிந்தே ஓயுமாம்!

இறக்கைக் குள்ளே ஏறிக் கொண்டால்
எட்டுத் திக்கும் செல்லுமாம்! - அது
பறக்கும் போதே குண்டைப் போட்டுப்
பலபேர் உயிரைக் கொல்லுமாம்!

காட்டைக் கடந்து, மலையைத் தாவிக்
கடலைத் தாண்டி ஓடுமாம்! - அது
நாட்டைக் கண்டால் வந்து நிற்க
நல்ல இடத்தைத் தேடுமாம்!

பாட்டன் பாட்டி கண்ட தில்லை
பறவை போன்ற கப்பலாம்! - குண்டு
போட்டால் தெரியும்! நானும் நீயும்
குழிக்குள் புகுந்தால் தப்பலாம்!

-1967
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/47&oldid=1424839" இலிருந்து மீள்விக்கப்பட்டது