பக்கம்:கனிச்சாறு 5.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


15  காக்கைப் பள்ளிக்கூடம்!

பறந்து வந்த காக்கை யெல்லாம்
பள்ளிக் கூடம் போட்டதாம்!
மறந்து போன பாட்டை எல்லாம்
மீண்டும் மீண்டும் கேட்டதாம்!

கழுத்தைச் சாய்த்துக் காதை வளைத்துக்
கவனத் தோடு நின்றதாம்!
எழுத்தில்லாமல் ஏடில்லாமல்
எல்லாம் கற்றுக் கொண்டதாம்!

நந்தன் வீட்டுக் கூரை மேலே
நாளும் வந்து கூடுமாம்!
குந்தி யிருந்து பாடம் படித்துக்
கூடிப் பறந்தே ஓடுமாம்!

இரையைக் கண்டால் 'கா...கா’ வென்றே
இனத்தைக் கூவி அழைக்குமாம்!
உரையைக் கேட்டே காக்கை எல்லாம்
ஒன்றாய் உண்டு பிழைக்குமாம்!

-1968
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/50&oldid=1424842" இலிருந்து மீள்விக்கப்பட்டது