பக்கம்:கனிச்சாறு 5.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


44  நல்ல பழக்கங்கள்!

வெளியில் விற்கும் பண்டங்களை
நல்ல பாப்பா - நீ
விரும்பித் தின்னல் கேடு செய்யும்,
நல்ல பாப்பா!

அழுகிப் போன காய் கனிகள்
நல்ல பாப்பா - நீ
அருந்துவதால் வருந்திடுவாய்
நல்ல பாப்பா!

வளர்ந்து வரும் உகிர்களையே
நல்ல பாப்பா - நீ
வாயிலிட்டுக் கடித்திடாதே
நல்ல பாப்பா!

களைந்த வற்றை நீக்கி விடு,
நல்ல பாப்பா - நாளும்
கழுவி அதைத் தூய்மை செய்வாய்,
நல்ல பாப்பா!

நோய் வருமுன் காத்திடலே
நல்ல பாப்பா! - தீய
நோய் தடுக்கும் நல்லமுறை
நல்ல பாப்பா!

பாய்ந்து வரும் நீரை, முன்பே
நல்ல பாப்பா! - கரை
போட்டுத் தடுத்து விடு
நல்ல பாப்பா!

பசிக்கு முன்னே புசித்து விடல்
நல்ல பாப்பா! - நல்ல
பாலெனினும் நஞ்சே ஆகும்.
நல்ல பாப்பா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/74&oldid=1424883" இலிருந்து மீள்விக்கப்பட்டது