பக்கம்:கனிச்சாறு 5.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  41


புசிக்கை யிலும் அளவு வேண்டும்;
நல்ல பாப்பா! - இதைப்
போற்றி நடப்பாய் என்றும்
நல்ல பாப்பா!

-1970


45  இழுவை வண்டி!

கொள்ளைத் தின்னும் குதிரை வண்டி
இழுக்கும் போது- தம்பி
கொடுமையன்றோ இழுவை வண்டி
நினைக்கும் போது!

புல்லைத் தின்னும் எருது - வண்டி
இழுக்கும் போது - தம்பி
புன்மை யன்றோ இழுவை வண்டி
நினைக்கும் போது!

எந்தி ரத்தால் ஓடும் - வண்டி
இருக்கும் போது - தம்பி
இழுத்துப் போக மாந்தனை நாம்
ஏவ லாகுமோ?

உயர்ந்த தடா உலகம் - என்றே
ஓங்கிப் பேசுவாய்! - தம்பி
ஒருவன் இழுக்க உயர ஏறி
ஓட ஏசுவாய்!

மக்கள் தம்மை மாடு - குதிரை
என நினை யாதே! - தம்பி
மழையில் வெயிலில் அவரை வாட்டி
மனம் இழியாதே!

தக்க வற்றைச் செய்வதுதான்
தனிச் சிறப்பாகும் - தம்பி
தகாத வற்றைத் தவிர்ப்பதுவே
தமிழ்ச் சிறப்பாகும்!

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/75&oldid=1424889" இலிருந்து மீள்விக்கப்பட்டது