இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
48 ☐ கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி
53 பந்தாடு!
பச்சைக் கிளியே!
பாடுங் குயிலே!
பந்தை எடுத்தாடு! - என்
அச்சுப் படிவே!
அசையும் விளக்கே!
அடித்துப் பிடித்தாடு!
செவந்திப் பூவே!
செந்தா மரையே!
செவ்வடி சிவப்பேற - என்
குவளை விழியே!
கோவைப் பழமே!
குதித்துக் குதித்தாடு!
மல்லிகை மொக்கே!
மடமான் கன்றே!.
மணிக்கை அடித்தாடு! - என்
முல்லைச் சரமே! .
முத்துச் சிரிப்பே!
முன்பின் வளைந்தாடு!
பாலொளி நிலவே!
பன்னிற மயிலே!
பந்துடன் நீயாடு! - என்
வாலைத் திருவே!
வாடா மலரே!
வானில் எறிந்தாடு!
-1977