பக்கம்:கனிச்சாறு 5.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


58  கண்கட்டு ஆட்டம்!

பையன் : கண்ணைக் கண்ணைக் கட்டி வா!
காரிருளில் நடந்து வா!
மண்ணை விண்ணை அளித்து வா!
மாப்பிள்ளையைத் தேடி வா!

பெண் : எங்கள் வீட்டுப் பெண்ணாம்;
இழந்து விட்டாள் கண்ணாம்!
திங்கள் முகம் மூடி;
தேடி இங்கே வாடி!

பையன் : பிள்ளை நல்ல பிள்ளை!
பிள்ளை அழகு கொள்ளை!
பள்ளி செல்லும் பருவத்திலே
பார்வை இரண்டும் நொள்ளை!

பெண் : வாடி இங்கே வாடி,
வண்ணத் தமிழ் பாடி!
ஓடித் தூணைத் தொட்டாயோ?
ஓ! ஓ! என்றே விட்டாயோ?

பையன் : மின்னல் கொடி ஆடுமாம்!
மேலும் கீழும் தேடுமாம்!
பின்னால் உள்ளேன் பிடித்துக்கொள்!
பேசா தென்னைக் கட்டிக்கொள்!

பெண் : கையைக் கையை நீட்டாதே!
கட்டை யவிழ்த்துப் பார்க்காதே!
பையப் பைய நடந்து வா!
பள்ளம் உள்ளது விலகி வா!

பையன் : கப்பல் போல அசைந்து வா!
காற்றுக் கடலில் நீத்தி வா!
அப்பன் பெயரைச் சொல்லி வா!
அரும்புப் பல்லைக் காட்டி வா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/86&oldid=1424827" இலிருந்து மீள்விக்கப்பட்டது