பக்கம்:கனிச்சாறு 5.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


60  சிரிப்பாய் இருக்குதடி!

எடுப்பு

சிரிப்பாய் இருக்குதடி! - என்
சின்னப்பெண் செய்கின்ற
சுட்டித்தனம் -எண்ணச்
சிரிப்பாய் இருக்குதடி!

தொடுப்பு
நெருப்படி வேலையில்
இருக்கையில் அவள் - ஒரு
நிமையமும் அமையாமல்
எமையிடர் செய்வது

(சிரிப்பாய்)

முடிப்பு

கிடைக்கின்ற பொருள்களோ எறிபந்து நிலைதான்!
கிழிபடும் பொத்தகத் தாள்களோ கொலைதான்!
உடைக்கின்ற பொம்மைகள் கிளுகிளுப் பைகள்
ஒவ்வொன்றாய்த் தீர்ந்தாலும் ஓயாது கைகள்! (சிரிப்பாய்)

எழுந்ததும் சிணுங்குவாள்! பாலுக்கோ அழுவாள்!
இரண்டுவாய் குடித்தததும் எழுந்தோடி விழுவாள்!
கொழுந்துடல் பசுவெண்ணெய்! கொஞ்சினால் மிஞ்சும்!
கோவைவாய் விழிவண்டு இருள்கண்டால் அஞ்சும்! (சிரிப்பாய்)

முகமாவைப் பூசினால், விழிக்குமை யிட்டால்
முன்னுற்ற முடிநீவிக் கரும்பொட்டு வைத்தால்
நகையாடும் மலர்முகம்! நொடியினில் மீண்டும்
நலிந்திடும் சிதைந்திடும்; நகைத்திடத் தூண்டும்! (சிரிப்பாய்)

மூத்தவன் 'தமிழ் அரிமா' மிக அமைதி!
முதலவள் குழலியோ முகங்கோணும் சிணுங்கி!
ஆத்தாடி! கடைக்குட்டி மிகப்படு சுட்டி!
ஆனாலும் அவள்தானென் கற்கண்டுக் கட்டி! (சிரிப்பாய்)

-1980
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/88&oldid=1424831" இலிருந்து மீள்விக்கப்பட்டது