இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 63
68 நல்ல செயலும் தீய செயலும்!
கத்தி ஒன்றின் உதவியால்
காய் கறிகள் அறியலாம்!
கத்தி ஒன்றின் உதவியால்
எழுது கோலைச் சீவலாம்!
கத்தி ஒன்றின் உதவியால்
கனியை அறுத்துத் தின்னலாம்!
கத்தி ஒன்றின் உதவியால்
கொல்லும் பாம்பைக் கொல்லலாம்!
கத்தி ஒன்றின் உதவியால்
'கழுத்தை’ வெட்டி மாள்வதா?
-1960
69 உடல் தூய்மை!
பல்லைத் தூய்மை செய்வதால்
பாதி நோயை நீக்கலாம்!
சொல்லைத் தூய்மை செய்வதால்
சண்டை வந்தால் போக்கலாம்!
மூக்கைத் தூய்மை செய்வதால்
மூச்சை நன்கு வாங்கலாம்!
நாக்கைத் தூய்மை செய்வதால்
நச்சு நோய்கள் நீங்கலாம்!
கண்ணைத் தூய்மை செய்வதால்
குருட்டுத் தனத்தை ஓட்டலாம்!
உன்னைத் தூய்மை செய்வதால்
ஒழுங்கை எங்கும் காட்டலாம்!
-1960