பக்கம்:கனிச்சாறு 5.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  65


72

இல்லை!


சிற்றெறும்புக் கூட்டத் திலே
சோம்பல் இல்லை இல்லையே!
கற்றுத் தேர்ந்த கூட்டத்திலே
கயவர் இல்லை இல்லையே!

குலைக்கும் நாய்கள் என்றுமே
கடிப்ப தில்லை இல்லையே!
அலைகள் என்றும் கடலிலே
அடங்கல் இல்லை இல்லையே!'

பொய்யை வைக்கும் நெஞ்சுள்ளார்
பிழைப்ப தில்லை இல்லையே!
மெய்யைச் சொல்லும் நல்லவர்
மாள்வ தில்லை! இல்லையே!

-1960


73

உண்டு!


வேல் பிடிக்கும் கையிலே
வீரம் உண்டு போரிட!
நூல் பிடிக்கும் கையினால்
நன்மை உண்டு அறியவே!

மலர் இருக்கும் இடத்திலே
மணமும் உண்டு நுகரவே!
உலர்ந்திருக்கும் காய்களில்
ஓசை உண்டு கேட்கவே!

அன்பு இருக்கும் ஒருவர்க்கே
அறிவு உண்டு தெரியவே!
தென்பு இருக்கும் உடலிலே
திறமை உண்டு செய்யவே!

-1960
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/99&oldid=1444840" இலிருந்து மீள்விக்கப்பட்டது