பக்கம்:கனிச்சாறு 7.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


45

வினையும் விளைவும் தோற்றமும்!


என்மேல் பழிகளை இறைக்கின் றார்களாம்;
இழிவுகள் என்மேல் சாற்றுகின் றார்களாம்;
புன்மொழி செவிசுடப் புகலுகின் றார்களாம்;
பொருளையும் புகழையும் விரும்புகின் றேனாம்!
‘என்னிவற் றிற்கு(உ)ம் விளக்கம்?’ - என்றோர்
இன்னரும் அன்பர் எழுதி யிருந்தார்!
‘சொன்னவை யாவிலும் ஒருதுளி யாகிலும்
சொல்லுக, உண்மை இராதா?’ -என்கிறார்!

உண்மையாய் அவர்போல் உள்ளவர்க் குரைக்கிறேன்;
உண்மை இருக்கலாம்! ஆயினவ் வுண்மையின்
ஒண்மை வடிவினை யார்வந் துரைப்பது?
உரைப்பவர் மெய்யரா பொய்யரா என்பதைத்
திண்மையாய் எதைக்கொண் டளப்பது? தீர்வுசெய்
தீங்கனை மூங்கனை எப்படித் தெளிவது?
நுண்மையாய் அவர்திறம் நம்பிடு வீரெனில்,
நுவலுக, என்னையேன் நம்பிட வில்லை,நீர்?

பனைமரத் தடியிலே பாலினை அருந்துவார்
பார்ப்பவர்க் கெங்ஙனம் படுவரோ அவர்போல்,
எனைநிறத் தாயினும் பொதுநிலைக் குற்றவர்
எவர்விழிக் காயினும் அவர்மனக் காட்சியர்!
தினைமனங் கொண்டு பனைமனம் தேறுவார்
தேற்றம் நிறுப்பன காலமும் செயலுமே!
வினைபடல் வகையினில் பற்பல விளைவுகள்
வேறு வேறு தோற்றமென் றுணர்கவே!

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/105&oldid=1446100" இலிருந்து மீள்விக்கப்பட்டது