பக்கம்:கனிச்சாறு 7.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  61


46

இருள் உனக்கு விடியுமா?


உன்னைப் போலக் கோடிப் பேர்கள்
ஒருங்கிணைந்து புறப்பட் டாலும்
என்னை வீழ்த்த முடியா தென்று
                                             - தெரியுமா? அட,

மின்னைப் போலக் கதிரைப் போல
மேலெழும்பும் காற்றைப் போல்
அன்னைத் தமிழில் கரைந்து விட்டேன்;
                                             - புரியுமா?

பொய்யைச் சொல்லிப் புளுகைச் சொல்லிப்
புழுக்கை யெல்லாம் எண்ணி னாலும்
மெய்யை வீழ்த்த முடியா தென்று
                                             - விளங்குமா? அட,

எய்யச் சொல்லி அம்பைச் சிலரும்
எடுத்தெடுத்துக் கொடுத்திட் டாலும்,
மையக் குத்தித் தவிட்டில் அரிசி
                                             - துலங்குமா?

பழியைச் கூறி இழிவைக் கூறிப்
பரக்க எழுதிப் பரப்பி னாலும்
வழியைத் தடுத்தென் திசையைத் திருப்ப
                                             - முடியுமா? அட,

விழியைத் திறந்தே குழியில் விழுந்து,
விலாவ லிக்க எம்பி னாலும்
அழியச் சூழும் இருள் உனக்கு
                                             - விடியுமா?

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/106&oldid=1446102" இலிருந்து மீள்விக்கப்பட்டது