பக்கம்:கனிச்சாறு 7.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  63


48

தொண்டில் எனது மனம்!


மழைக்குக் கரையாது;
வெயிலுக்குக் காயாது;
மருள்பனிக்கு நனைந்திடாது!
தழைக்கத் தவிராது;
தளிர்க்கக் குறையாது;
தணலுக்குப் பொசுங்கிடாது!
உழைக்கத் தளராது; இங்(கு)
உணக்க வதங்காது; எஃ(கு)
ஒளிர்வாட்குச் சிதைந்திடாது!
குழைக்கத் தமிழ்மணக்கும்
தொண்டில் எனதுமனம்
கூத்தாடும் காலமதிலே!

ஏசலுக்கு மழுங்கா(து); ஓர்
எதிர்ப்புக்குக் குலையாது;இங்(கு)
இழிவுக்குச் சாய்ந்திடாது!
பூசலுக்கு வருந்தாது;
பொய்யுரைக்கும் அழுங்காது;
பொறாமைக்குப் புழுங்கிடாது!
ஊசலுக்குத் துஞ்சாது;
உலுத்தர்க்கும் அஞ்சாது
உதவாமைக் கொடுங்கிடாது!
பேசலுக்கும் மீறி,இனத்
தொண்டில் எனதுமனம்
பெயராத காலமதிலே!

நலிவில் நசுங்காது;
நயப்பில் மயங்காது!
நடிப்புக்கு மசிந்திடாது!
மெலிவில் நெகிழ்க்காது;
மிகைவாழ்வுக் கேங்காது;
மெச்சுதற்கும் வீங்கிடாது!
பொலிவில்ஏ மாறாது;
பூட்டறைக்கும் வாடாது
புன்துயர்க்கும் வருந்திடாது
வலிவில் - தமிழ்நிலத்தை
வாங்கும் செயலில்மனம்
வழக்காடும் காலமதிலே!

-1986
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/108&oldid=1446104" இலிருந்து மீள்விக்கப்பட்டது