பக்கம்:கனிச்சாறு 7.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  67


மெழுகைப் போன்ற உடலார் - புது
மெருகு கூட்ட அலைவார்;
கழுகைப் போன்ற நோக்கர் - பல
கயமை செய்து வாழ்வார்!

மானம் நாணம் பாரார்! - திரை
மறைவில் சூழ்ச்சி செய்வார்!
கூனல் தாங்கிப் போன - ஏழைக்
கூட்டம் நொந்து சாகும்!

என்னை விரும்பி னோர்கள் - பின்
என்னை வெறுத்த பேர்கள்,
முன்னை அன்பு காட்டி - என்
முதுகில் குத்தி யோர்கள்,

பன்னிப் பன்னிப் பேசி - உயிர்
பழகப் பழகக் கூடித்
தன்னை உயர்த்திக் கொண்டார் - எனும்
தாழ்ச்சி வரிசை நீளும்!

பொய்யும் புளுகும் சொல்லி - என்
புரைகள் பெருகப் பண்ணி,
எய்யும் பொருள்கள், பெருமை - என
யாவும் மிகுத்துக் கொள்வார்!

தொண்டு தொண்டு என்றே - என்
வாழ்வைத் தொலைத்துக் கொண்டேன்!
பெண்டு பிள்ளை எல்லாம் - என்
பிழைப்பைக் கண்டு தூற்றும்!

மொழியும் இனமும் நாடும் - முன்
இழந்த உரிமை மீள நல்
வழியும் கண்டு சொன்னேன் - நாய்
வாலும் மதிக்க வில்லை!

என்னைக் கொன்று கொண்டேன்! - இவ்
வினத்தை மீட்க நின்றேன்!
சின்ன துணையும் இல்லை - ஒரு
சிறிய உதவி இல்லை!

தன்னந் தனிய னானேன்! - என்
தாயும் இரக்கப் பட்டாள்!
முன்னில் வணங்கிச் சென்றார்! - என்
முதுகுப் புறத்தில் மென்றார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/112&oldid=1446156" இலிருந்து மீள்விக்கப்பட்டது